எல்லை மீறும் சீனா வடகொரியா : மைக்ரோசொப்ட் விடுத்துள்ள எச்சரிக்கை
இன்று முழு உலகமே வியந்து பார்க்கும் தொழிநுட்பம் என்றால், அது செயற்கை நுண்ணறிவு ஆகும்.
தற்போது, இத்தொழிநுட்பம் குறித்ததான எச்சரிக்கையொன்றை மைக்ரோசொப்ட் நிறுவனம் முன்வைத்துள்ளது.
அதாவது, செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி சீனா மற்றும் வடகொரிய ஹேக்கர்கள் ஊடுருவுவதாக மைக்ரோசொப்ட் த்ரெட் அனாலிசிஸ் மையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் வங்கிகள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றின் கணினி வலைப்பின்னலை ஊடுருவி, தனிப்பட்ட தகவல்கள் திருட்டு முதல் நிதி ஆதாரங்கள் சுரண்டல் வரை சீன ஹேக்கர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீடித்து வருகின்றன.
சீனா
இதுதொடர்பில் மைக்ரோசொப்ட் நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது அந்த ஹேக்கிங் முறையில் நவீன ஏஐ நுட்பத்தையும் சீனா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதனைப் பயன்படுத்தி அமெரிக்க தேர்தல்களின் போக்கினை ஊடறுப்பது முதல் பாதுகாப்பு ரகசியங்களை களவாடுவது வரை சீன ஹேக்கர்கள் எல்லை மீறி வருகின்றனர்.
இந்த ஏஐ நுட்பத்திலான ஹேக்கிங்கை அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, தென் சீனக் கடல் பிராந்தியத்தில் சீனா அதிகம் பயன்படுத்துகிறது.
தென்சீன கடலில் அண்டை நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவி தகவல் சேகரிக்கவும், அவசியமெனில் அவற்றை குலைக்கவும் இந்த ஹேக்கர்கள் முயற்சித்து வருகின்றனர்” என்றது.
வடகொரியா
அத்துடன், சீன ஹேக்கர்கள் குறித்தான புகார்கள் எழும்போதெல்லாம் தங்களுக்கும் மேற்படி ஹேக்கர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா மறுத்து வந்தது.
சீனாவைப் போன்றே வடகொரியாவும் தனது ஹேக்கிங்கில், ஏஐ நுட்பங்களை கலக்க ஆரம்பித்திருப்பதாக மைக்ரோசாப்ட் ஆய்வு தெரிவிக்கிறது.
இதன் மூலமாக ரான்சம்வேர் தாக்குதல்களை நடத்தி பெரு நிறுவனங்களிடம் இருந்து வடகொரிய ஹேக்கர்கள் பணம் பறிப்பதாகவும் மைக்ரோசாப்ட் ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.