அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை - எச்சரிக்கிறார் வடக்கு ஆளுநர்
வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiagarajah) தெரிவித்துள்ளார்.
எந்தவொரு விடயத்தையும் சட்ட ரீதியாகவே அணுக வேண்டுமெனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் அபிவிருத்தி, பொருளாதார, சமூக மேம்பாடு உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் பொது மக்கள் எதிர்ப்பு வெளியிடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக தனியாருக்குச் சொந்தமான அல்லது பூர்வீகமாக தாம் வாழ்ந்து வரும் காணிகளை கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக இடம்பெறும் பொது மக்கள் - அரச அதிகாரிகளுக்கு இடையிலான இந்த முரண்பாடுகள் தொடர்பில் ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை அளவீடு செய்வது என்பது அதனைக் கைப்பற்றுவதாக அர்த்தப்படாது எனவும், காணிகளை அடையாளப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்