யாழில் அரச அதிகாரிகளுக்கு எதிராக வெடித்த போராட்டம் - வட மாகாண ஆளுநரின் அறிவிப்பு
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.
வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர்.
அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
உரிய நடவடிக்கைகள்
மற்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாகக் கேட்டறிந்து, விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |