வடக்கு கிழக்கை மையப்படுத்தி முதன் முறையாக அமைக்கப்பட்ட அதி நவீன நிறுவனம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி முதல் முறையாக அதி நவீன சீருடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று மன்னாரில் அமைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மூர் வீதி நெடுங்குளம் பகுதியில் AA Sports நிறுவனத்தின் பணிப்பாளர் திரு அமல்ராஜனால் உருவாக்கப்பட்ட குறித்த நிறுவனம், நிறுவன ரீதியான ஆடைகள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த ஆடைகளை தயாரிப்பதுடன் அச்சு தொழில் நுட்பம் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை முழுவதற்குமான சந்தைப்படுத்தலுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸார்ன்லி டிமேல், மன்னார் பொது பொலிஸ் பரிசோதகர் பண்டுல வீரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடமாகாணத்திற்கான விளையாட்டுத்துறை அமைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு வைபவரீதியாக நிறுவன செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தனர்.










