போதைப்பொருளுடன் சிக்கிய கணவரால் பதவியை துறக்கும் அநுர கட்சி உறுப்பினர்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபருடைய மனைவியான தேசிய மக்கள் சக்தி பேலியகொட நகரசபை உறுப்பினர் தனது பதவியை விட்டு விலகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கணவர் கைது செய்யபப்பட்டதை தொடர்ந்து, நகரசபை உறுப்பினரின் பேலியகொட இல்லமும் காவல்துறையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான எந்த சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அதிபரின் சந்தேகத்துக்கிடமான தொடர்பு
சந்தேகநபரான அதிபரின் மகனும் கடந்த 30 ஆம் திகதி 20 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து, அநுராதபுர குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அதிபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்ட அதிபரின் மருமகனான சஷி, துபாயில் இருந்து அவருக்கு போதைப்பொருட்களை அனுப்பியதாக கண்டறிப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேகத்திற்குரிய அதிபருக்கு கொஸ்கொட சுஜி என்ற போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு இருந்ததாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கவனம்
இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக நேற்று பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சந்தேகநபரின் மனைவியான பேலியகொட நகரசபை உறுப்பினர் பதவி விலகுவது மிகவும் பொருத்தமானது என்று அவர்களில் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், அவரை ஒரு கட்சியிலிருந்து நீக்குவதற்கு பதிலாக, அவராகவே தனது பதவியை விட்டு விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |