கொழும்பு ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதலுக்கு வடக்கின் தமிழ்த் தலைமைகள் கண்டனம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்களத் தலைவர்கள் தலைமையிலான கட்சியினால் தலைநகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் நிமல் அமரசிறி பெப்ரவரி 27ஆம் திகதி உயிரிழந்தார்.
எம்.ஏ.சுமந்திரன்
உயிரிழந்த நிமல் அமரசிறியின் மரணம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Our heartfelt condolences to the family and the NPP comrades. We unreservedly condemn the violence that was unleashed on the protesters yesterday https://t.co/wHn4PxAr1n
— M A Sumanthiran (@MASumanthiran) February 27, 2023
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"அகிம்சையாகவும் ஜனநாயக ரீதியாகவும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ரணிலின் முரட்டு அரசாங்கமும், அவரது பொதுஜன பெரமுனவின் நண்பர்களும் காவல்துறையினர் ஊடாக நடத்திய மிருகத்தனமான தாக்குதலை தமிழ் தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை தமிழ் மக்கள் நல்ல காரணத்திற்காகவே நிராகரித்ததாகவும் என மேலும் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்து கொண்டு உயிரிழந்த நிமல் அமரசிறியின் உயிரிழப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தெற்கில் உள்ள சிங்கள மக்களின் பல பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

