அதிரும் தென்னிலங்கை! அடுத்தடுத்து நான்கு இடங்களில் துப்பாக்கிச்சூடு
புதிய இணைப்பு
பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில் இன்று (06) காலை மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நீர்கொழும்பு
நீர்கொழும்பு குட்டுடுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (6) அதிகாலை 1:38 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நிதி தகராறில் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாம் இணைப்பு
கொழும்பு (Colombo) - கிரேண்ட்பாஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (05) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 26 வயது நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. ரிவோல்வர் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தனியார் வங்கிக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு
இதற்கிடையில், மருதானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (06) அதிகாலை நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
