இந்தியாவுடனான மோதலின் எதிரொலி: மாலைதீவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஒரே ஆண்டில் மாலைதீவுக்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான தரவுகளை மாலைதீவு சுற்றுலா துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாலைதீவுக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை
இந்தியா, மாலைதீவு இடையேயான மோதல் போக்கு தொடரும் நிலையில் இவ்வாறு , சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மார்ச் 4ஆம் திகதி வரையில் 41,054 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
ஆனால் இந்தாண்டு, மார்ச் 2ஆம் திகதி வரையில் மாலைதீவு சென்ற சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 27,224ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 13,830 குறைவாகும்.
மோதல் நிலை
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மாலைதீவுக்கு சென்ற மொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் 10 சதவீதத்துடன் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது.
ஆனால், இந்த முறை அதன் பங்கு 6% குறைந்துள்ள நிலையில், இந்தியா ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இதேபோல இருந்தால் இந்தியாவில் இருந்து மாலைதீவு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.