இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை : நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
2025.09.23 நிலவரப்படி இலங்கை சிறைச்சாலைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 34,765 என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இவர்களில் கைதிகளின் எண்ணிக்கை 10,509 என்றும் சந்தேக நபர்களின் எண்ணிக்கை 24,256 என்றும் கூறினார்.
அபராதம் செலுத்த முடியாத கைதிகளின் எண்ணிக்கை
2025.08.31 நிலவரப்படி அபராதம் செலுத்த முடியாத கைதிகளின் எண்ணிக்கை 2,122 என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் கைக்குழந்தைகளுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 38 ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சிறையில் உள்ள 38 கைக்குழந்தைகள்
இன்று (08) நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட பெண்களுடன் 38 கைக்குழந்தைகள் சிறையில் இருப்பதாகக் கூறினார். அதில் 15 ஆண் குழந்தைகளும், 23 பேர் பெண் குழந்தைகளும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
தாய்மார்களுடன் சிறைச்சாலையில் உள்ள 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிப்பதற்காக சிறைச்சாலை பெண்கள் பிரிவுகளில் குழந்தை பராமரிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.
குழந்தை பராமரிப்பு மையங்கள்
இந்தக் குழந்தை பராமரிப்பு மையங்கள் ஏனைய கைதிகளிடமிருந்து தனித்தனியாக அமைந்துள்ளதாகவும், அங்கு குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கைதிகளுக்கு வழங்கப்படும் தினசரி உணவுப் பங்கீட்டுடன், குழந்தைகளுக்கு பால்மா மற்றும் தினசரி உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், சிறையில் தாய்மார்களுடன் உள்ள குழந்தைகளின் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் விதம் குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், தனியார் நிறுவனத்தின் வளங்களைக் கொண்டு சுமார் 10 ஆண்டுகளாக முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையம் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இதற்கிடையில், 2025 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 31,வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளின் எண்ணிக்கை 425 ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
