தொடரும் கன மழை: மன்னாரில் 15,205 குடும்பங்கள் பாதிப்பு
மன்னார் (Mannar) மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 15,205 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு (Trincomalee) கிழக்கே சுமார் 130 கிலோ மீற்றர் தொலைவில் இன்று (27.11.2024) அதிகாலை 05.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடற்கரையை அண்மித்து நகர்ந்து சூறாவளியாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தொடர் மழை
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழையினால் 15,205 குடும்பங்களைச் சேர்ந்த 52,487 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 1240 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 128 நபர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 43 தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர தலைமையிலான குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் போது பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் உள்ளடங்களாக உரிய திணைக்கள அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |