நுவரெலியா - இராகலையில் சில குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சில குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நுவரெலியா, இராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதுடன், இந்த விடயம் அப்பகுதி கிராமசேவகர் ஊடாக இராகலை காவல்துறை மற்றும் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரண உதவிகளை நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையே காணப்படுவதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குடியிருப்பாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.