முதல் வித்தைப் பெற்றெடுத்த முத்து லண்டனில் மறைந்தது
‘மாவீரர் தினம்’ என்ற பெயரில் காரத்திகை மாதம் 27ம் திகதி வருடா வருடம் உலகத் தமிழர்களால் நினைவுகூரப்படுகின்ற தினம் என்பது, விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் களப்பலியான லெப்டினன்ட் சங்கரின்( செ.சத்தியநாதன்) நினைவாகத்தான்.
சங்கர் அவர்களின் தந்தையும், தமிழ் மக்களின் விடுதலையை நேசித்து அதற்காக அரும்பாடுபட்டவர் என்று மக்களால் நேசிக்கப்படுபவருமான செல்வச்சந்திரன் சின்னத்துரை லண்டனில் காலமானார்.
உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு தனது 96வது வயதில் காலமான இளைப்பாறிய உதவி அதிபர் செல்வச்சந்திரன் சின்னத்துரை அவர்களுக்கு முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்கள் தமது அஞ்லியைச் செலுத்தி வருகின்றார்கள்.
'இவர் தமிழீழ மண்ணின் விடிவையும், தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணின் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என ஆவல் கொண்டவர். தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். இந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத் துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்பு பெற்று அரசியல் ரீதியாக இலட்சியத்தை அடைவதற்கும் பணியாற்றியவர்' என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர்.
'தேச விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக உறுதியோடு வாழ்ந்த உயர்ந்த
மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. அவர்கள் எமது தேச ஆன்மாவில்
நீங்காத நினைவுகளாகக் காலமெல்லாம் நிலைத்திருப்பார்கள்' என்று அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது உலகத் தமிழர் வரலாற்று வளாகம்.





