ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒக்டோபர் மாதம் மிலேச்சத்தனமானது!
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மே, ஜூலை, செப்ரெம்பர், நவம்பர் ஆகிய மாதங்கள் முக்கியமானவை.
மே மாதத்தின் பதினெட்டாம் திகதியை இனப்படுகொலை நாளாகவும், ஜூலை மாதத்தை இனக்கலவர மாதமாகவும், செப்ரெம்பர் மாதத்தை அகிம்சையின் அடையாளமாகவும், நவம்பர் 27 ஆம் திகதியை இனவிடுதலைக்கான எழுச்சி நாளாகவும் ஈழத்தமிழர்கள் தமக்குள் பிரகடனம் செய்துவைத்திருக்கின்றனர்.
இந்நான்கு மாதங்களுடன் இன்னொரு மாதத்தினையும் சேர்க்க வேண்டிய காலச்சூழல் இன்று உருவாகியிருக்கின்றது.
அதாவது மேற்குறித்த நான்கு மாதங்களோடு, ஒக்ரோபர் மாதமாகிய இந்த மாதத்தினையும் ஈழத்தமிழர்கள் தம் வரலாற்றை நினைவுபடுத்தி, நினைவேந்தும் மாதமாகப் பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாதுகாக்கும் நோக்குடன் வந்த இந்திய இராணுவம்
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தது. இலங்கை இராணுவத்தினால் ஈழத்தமிழர்கள் கொன்றொழிக்கப்படுகின்றனர்.
எனவே இலங்கை இராணுவத்திடமிருந்து ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் இந்திய இராணுவம், அமைதிகாக்கும் காக்கும் படை என்ற பெயரோடு யாழ்ப்பாணத்தில் காலடிவைத்தது.
தம்மைப் பாதுகாக்கவென இந்தியப் பெருந்தேசம், தன் படைகளை அனுப்பிவைத்திருக்கின்றது என்கிற புளகாங்கிதத்தோடு ஈழத்தமிழர்கள் இந்திய இராணுவத்தை மங்களகரமாக வரவேற்றினர். அவர்களுக்கு வெற்றித்திலகமிட்டனர். மாலை அணிவித்தனர்.
ஆனால் அந்த அமைதியின் சாயம் நீண்டகாலத்திற்கு நீடிக்கவி்ல்லை. ஒரு பகல் கனவைப் போல விரைவாகவே கலைந்தது.
இலங்கை அரசின் அநீதி மிகு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் விரைவாகவே போர் மூண்டது.
தமிழ் மக்களைப் பாதுகாக்கவோ, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவோ துளியளவு பங்களிப்பினையும் செய்யமுடியாத நிலையிலிருந்து இந்திய இராணுவம் புலிகளுடன் போரிடுகிறோம் என்கிற பெயரில் தமிழர்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்றொழிக்கும் நடவடிக்கையினை ஆரம்பித்தது, அவ்வாறு இந்திய அமைதிப் படையினர், ஈழத்தில் அதிகளவான தமிழர்களைக் கொன்றொழித்தது இந்த ஒக்டோபர் மாதத்தில்தான்.
எனவே ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றோடு நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் நான்கு மாதங்களோடு ஐந்தாவதாக ஒக்டோபர் மாதத்தினையும் இணைத்துப் பார்க்கவேண்டிய தேவையுள்ளது.
ஏனெனில் இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த அநீதிகள், வன்கொடுமைகள் மிலேச்சத்தனமானவை. இலங்கை இராணுவம் செய்த இனப்படுகொலைக்கெல்லாம் அச்சாரமிட்டுக்கொடுத்தவை.
யாழ்ப்பாணத்தில் கால்வைத்த இந்திய படைகள்
1987 ஆம் ஆண்டில் ஒக்ரோபர் மாதமானது ஈழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய படைகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் வந்திறங்கியவுடனேயே இந்நிலத்தின் பௌதீகவியலைக் கணக்கிலெடுக்காது அகலக்கால் வைத்த இந்திய படைகள், வடக்கு, கிழக்கின் அனைத்துப் பாகங்களுக்குள்ளும் பரவின.
உலங்குவானூர்திகள், ராங்கிகள், கவச வாகனங்கள், ட்ராக்குள், கால்நடை என அனைத்துப் பயணத் தளங்களையும் பயன்படுத்தி பட்டிதொட்டியெங்கும் முகாமிட்டன.
1987 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் யாழ்ப்பாணத்தில் கால்வைத்த இந்திய படைகள் ஒக்ரோபர் மாதமளவில் புலிகளுடன் பெரும்போர் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தளவுக்கு இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்போல அச்சத்தை எதிர்கொண்டது இந்தியப் படைகள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொரில்லா தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இந்திய அமைதிப் படை, தன் இழப்புக்களின் கோரத்தை அப்பாவி தமிழர்கள் மீது காட்டியது.
இனப்படுகொலை
சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என எந்தப் பாகுபாடும் பார்க்காது காண்பவர் அனைவரையும் சுட்டுக்கொன்றது. பல நூற்றுக்கணக்கான பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது.
தமிழ் ஆண்களைக் கண்டாலே சுட்டுக்கொல்வது, எரிப்பது, உயிர்போகும் வரைக்கும் தாக்குவது என மானுட குலத்துக்கு எதிரான அத்தனை குற்றங்களையும் வடக்கு, கிழக்கு பாகங்களில் இந்தியப் படைகள் செய்தன.
தமிழர்களை எப்படியெல்லாம் இனப்படுகொலை செய்யலாம் என்பதை இலங்கை அரச படைகளுக்கு கற்றுக்கொடுத்த இந்தவகை வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்ட மாதம் ஒக்ரோபர் ஆகும்.
இந்த மாதத்தில் இந்திய படைகள் புதுக்காட்டுச் சந்தியில் பெரியதொரு படுகொலையைப் புரிந்தது. பளை பிரதேச செயலாளர் பிரிவில் வருகின்ற புதுக்காட்டுச் சந்தியானது, வடமராட்சி கிழக்கின் கடற்கரையோரமாக இருக்கின்ற பல கிராம மக்களையும் ஏ9 பாதையுடன் இணைக்கின்றது.
அப்பகுதியில் வாழும் அனைத்து மக்களும் புதுக்காட்டு சந்திக்கு வந்து, அங்கு தரித்து நின்றே பிற மாவட்டங்களுக்கு பேருந்து ஏறும் நிலை இப்போதும் காணப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி
1987 ஆம் ஆண்டின் ஒக்ரோபர் மாத 11 ஆம் திகதியும் அவ்வாறே மக்கள் தூர இடங்களுக்கு செல்வதற்காக புதுக்காட்டுச் சந்தியில் காத்திருந்தனர்.
அவ்வேளையில் ஆனையிறவு படைத்தளத்திலிருந்து பலாலிக்கு சென்றுகொண்டிருந்த இந்திய அமைதிப்படையில் வாகனத் தொடரணி, காத்திருந்த அப்பாவி மக்களைக் கண்டது.
அந்த வாகனங்களிலிருந்து கீழே குதித்த இந்தியப் படைகள் கண்மூடித்தனமாகக் காத்திருந்தவர்கள் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தன. இதன்போது 8 பேர் சம்பவ இடத்தில் படுகொலையானார்கள். பலர் காயமடைந்தனர்.
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12 ஆம் திகதி (புதுக்காட்டு சந்திப் படுகொலைக்கு மறுநாள்) யாழ்.கோட்டை பகுதியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி இந்தியப் படைகள் புறப்பட்டன.
இவ்வாறு புறப்பட்டு வரும் வழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றபடி நகர்ந்த வாகனத்தொடரணி, கொக்குவில்- பிரம்படி வீதியை அண்மித்ததும் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கியது.
சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என யாரையும் பார்க்காது சுட்டனர். இந்தியப் படைகளுக்கு இரண்டு வயது குழந்தைகள் கூடப் பயங்கரவாதிகளாய் தெரிந்த தருணம்.
தீவகப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தேடி வந்து தங்கியிருந்த மக்கள் உள்ளடங்கலாக 50 இற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் படுகொலையின் போது கொல்லப்பட்டனர்.
இதே மாதத்தின் 21 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தன் கோரத்தாண்டவத்தை ஆடின இந்தியப் படைகள்.
இந்திய அமைதிப்படை
யாழ்.கோட்டையிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவம் நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தது. முதற்கட்டமாக மருத்துவ விடுதிக்குள் நுழைந்த படைகள் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுத்துக்கிடந்த நோயாளர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது.
சுட்டுக்கொன்ற உயிர் எஞ்சிக் கிடந்து கெஞ்சியோர் மீது யன்னல்களுக்குள்ளால் கைக்குண்டுகளை வீசிக் கொன்றனர்.
தாம் மருத்துவர்கள், தாம் தாதியர் என பதவிக்குரிய ஆடைகளையும், ஆவணங்களையும், உபகரணகளையும் இராணுவத்துக்குக் காண்பித்தபடியே மக்களைக் காப்பாற்ற மருத்துவ விடுதிக்குள் நுழைந்த மருத்துவர்களைக் கூட இந்திய அமைதிப்படை விட்டுவைக்கவில்லை.
அனைவரையுமே சுட்டுக்கொன்றது. மருத்துவமனைக்கு உயிர்காக்க சென்றவர்கள், உயிருடன் திரும்பிவருவார்கள் எனக் காத்திருந்தவர்களுக்கு அவர்தம் இறுதி அஸ்தியைக்கூட கொடுக்க முடியாதளவுக்கு அட்டூழியம் புரிந்து விட்டு யாழ்.போதனா வைத்தியசாலையை விட்டு வெளியேறின இந்தியப் படைகள்.
இவ்வாறு ஒக்ரோபர் மாதத்தில் இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்திய படுகொலைகளானவை, அந்தக் காலப்பகுதிக்கு மிகவும் புதிது.
ஐந்தாவது மாதம்
தற்போதைய காட்சி மொழியில் சொல்வதானால், இன்று காசாவில் இஸ்ரேல் படைகள் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகப் புரியும் கொலைகளுக்கும், அன்று இந்திய இராணுவம் ஈழத்தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த வன்கொடுமைகளுக்குமிடையில் கடுகளவு வித்தியாசம் கூட இருக்கவில்லை.
இலங்கை இராணுவம் இறுதிப் போர்வேளையில் மருத்துவமனைகள், பொதுமக்கள் பாதுகாப்பிடங்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்தி மக்களைக் கொன்றொழிக்கும் முறையை முதலில் கற்றுக்கொண்டது, இந்திய இராணுவத்திமிருந்துதான்.
எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் புரிந்த இவ்வளவு பாரிய மனிதவுரிமை மீறல்களும், படுகொலைகளும் நிறைந்த ஒக்டோபர் மாதமானது, பாதிக்கப்பட்டவர்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய ஐந்தாவது மாதமாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 18 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.