சிங்கள குடியேற்றங்கள் என்ன செய்யும்....
தியாக தீபம் திலீபன் அகிம்சைப் போராட்டத்தின் அடையாளமாக ஈழத்தமிழர்களால் பார்க்கப்படுகின்றார். அவர் மேற்கொண்ட உன்னதமிகு போராட்டத்தின் மீது ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே தனி மரியாதையுண்டு.
அதற்காகவே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தில் வரும் அவரது நினைவேந்தல் வாரத்தை எத்தடை வரினும் சிரமேற்கொண்டு நடத்திமுடித்துவிடுகின்றனர்.
இந்தப் பின்னணியில்தான் இவ்வருடமும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் வாரம் வெகுமக்களின் ஆத்மார்த்தமான பங்கெடுப்புடன் இடம்பெற்று முடிந்திருக்கிறது.
இந்நிகழ்வு நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இலங்கை திருநாடும், இந்நாட்டு சிங்கள மக்களும் அகிம்சைப் போராட்டத்திற்குக் கூட இணக்கமற்றவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தது. அதற்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
திலீபனின் நினைவூர்திப் பவனி மீதான தாக்குதல்
தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தைத் தாங்கிய நினைவூர்தியானது கடந்த மாதம் 15 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.
வடக்கு, கிழக்கின் தமிழர் வாழிடங்களின் ஊடாக பயணித்து, அவருக்கு அஞ்சலி செய்வதே இவ்வூர்திப் பயணத்தின் நோக்கமாகும்.
அதன்படி கடந்த 17 ஆம் திகதி மூதூர் – கட்டைப்பறிச்சான் பகுதியிலிருந்து பயணத்தை ஆரம்பித்து, ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாகத் திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.
இதன்போது சர்தாபுர என்கிற சிங்கள குடியேற்ற கிராமத்தையும் ஊர்தி கடக்க வேண்டியிருந்தது. ஊர்தி குறித்த சிங்கள குடியேற்ற கிராமத்தை நெருங்குகையில், இந்தக் கிராம சிங்கள மக்கள், திருகோணமலை மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு சங்கத் தலைவர் தலைமையில் வீதியில் திரண்டனர்.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தியைப் பொல்லுகளாலும், கற்களாலும், தாக்கினர். ஊர்தியோடு பயணித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட 14 உணர்வாளர்கள் தாக்குதல்களுக்குள்ளாகினர். தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படமும், நினைவூர்தியும் பலத்தை சேதத்துக்குள்ளாகியது.
இந்த சம்பவம் தொடர்பில் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகத்தின் பேரில் சர்தாபுர பகுதியைச் சேர்ந்த 06 சிங்களவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இனங்களுக்கிடையி்ல் வன்முறை
இந்தக் கைது தொடர்பான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்றது. அன்றைய தினம் அதிக நேரம் எடுத்துக்கொண்ட இவ்வழக்கில், சந்தேக நபர்களை ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆயினும் அன்றைய தினம் மாலையே உயர் அழுத்தங்கள் காரணமாக கைதுசெய்யப்பட்ட ஆறுபேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்விடுவிப்புக்குச் சொல்லப்பட்ட மிக முக்கிய காரணம், இந்த ஆறு பேரையும் தொடர்ந்தும் சிறையில் வைத்திருந்தால், அமைதிப் பூங்காவான திருகோணமலையில் இனங்களுக்கிடையில் வன்முறை ஏற்படும், சமாதானச் சீர்குலைவு ஏற்படும் என்பதே ஆகும்.
இதற்கு முன்பும் திருகோணமலையை மையப்படுத்தி நடத்தப்பட்ட பல போராட்டங்கள் “இனங்களுக்கிடையில் வன்முறை ஏற்படும், சமாதானச் சீர்குலைவு ஏற்படும்” என்கிற வாய்ப்பாடுகளின் அடிப்படையில் தடுக்கப்பட்டிருக்கின்றன.
2019 ஆம் ஆண்டில் அபகரிக்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்றினை மீட்பதற்கான அறவழியிலான போராட்டம் சிங்கள காடையர்களின் பிரசன்னத்தினால் தடுக்கப்பட்டது.
அதேபோல திருகோணமலை நகரின் மத்தியில் திருக்கூடலூர் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்களினால் அங்கு வாழும் தமிழர்களால் தம் ஆலய வழிபாட்டைக் கூட செய்யமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சைவ ஆலயமொன்றின் தேர்த்திருவிழாவின்போது, சுவாமியை கடலுக்குள் இறக்கிவிட்டனர் என்பதைக் காரணம் காட்டி, அங்கு வன்முறை வெடித்தது. சிங்கள குடியேற்றப்பகுதியிலிருந்து வந்தவர்கள், தமிழர்களைத் துரத்தித் துரத்தித் தாக்கினர்.
ஆனால் உண்மையில் இந்தத் தாக்குதலுக்கான காரணம் இந்தக் கோயில் திருவிழா பிரச்சினை சொல்லப்படினும், அதற்கும் பிறிதொரு காரணம் இருந்தது.
புத்தர் சிலை நிறுவும் முயற்சிகள்
அங்கு வாழும் தமிழ் மீனவர்கள், சிங்கள மீன்கொள்வனவாளர்களுக்குத் தாம் பிடிக்கும் மீனை வழங்காமல், அப்பகுதியில் மீன்கொள்வனவிற்காக முதலீடு செய்திருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு வழங்கிவிட்டனர் என்கிற மனப்புழுக்கத்தின் காரணமாகவே திருக்கூடலூரில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.
ஆலய வழிபாட்டைக் காரணம் காட்டி இந்தப் பிரச்சினையைக் கையாண்ட சிங்களவர்கள் குறித்த புலம்பெயர் தமிழரை ICCPR சட்டத்தின் கீழ் கைதுசெய்யவேண்டும், அவரால் “இனங்களுக்கிடையில் வன்முறை ஏற்படும், சமாதானச் சீர்குலைவு ஏற்படும் என்கிற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
அத்தோடு திருக்கூடலூர் பகுதியில் சிங்களவர்களால் தாக்கப்பட்ட எவ்வித நீதியும் கிடைக்கவுமில்லை.
இவ்வருடத் தொடக்கப் பகுதியில் திருகோணமலையின் நெல்சன் தியேட்டருக்கு அருகாமையில் தாய்லாந்து பௌத்த துறவிகளின் வருகையை நினைவுபடுத்தும் விதமாக புத்தர் சிலையொன்றை நிறுவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதற்கு எதிராகத் தமிழ் உணர்வாளர்கள் ஜனநாயக முறைப்படி தம் எதிர்ப்பைக் காட்ட முனைந்தபோதும், இனங்களுக்கிடையில் வன்முறை ஏற்படும், சமாதானச் சீர்குலைவு ஏற்படும் என்ற காரணங்களைக் காட்டி அப்போராட்டங்கள் தடுக்கப்பட்டன. அதனை மீறி போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்த சிங்கள இனவாத கலவரக்காடையர்கள் களமிறக்கப்பட்டனர்.
திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வருகின்ற பெரியகுளம் நாகதம்பிரான் ஆலயத்தை அழித்து பெரலுகந்த ரஜமகாவிகாரை எனும் பெயரில் பௌத்த விகாரை அமைக்கும் பணிகள் மிக நீண்டகாலமாகவே இடம்பெற்று வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்த பிரதேச மக்கள் முயற்சித்தும் எதுவும் நடக்கவில்லை.
எனவே கடந்த மாதத்தில் மட்டும் இரண்டு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இரண்டுமே “இனங்களுக்கிடையில் வன்முறை ஏற்படும், சமாதானச் சீர்குலைவு ஏற்படும்” என்ற வாய்ப்பாடுகளைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
தமிழர் பிரதேசங்களை அபகரித்தல்
இப்படியாகத் தமிழர்களின் தலைநகரான திருகோணமலையில் தமிழர்கள் அறவழிப்படி – ஜனநாயக முறைப்படி ஓரிடத்தில் கூடித் தமக்கு எதிரான அநீதிகளுக்கு நீதிகோரக்கூட உரித்தற்றவர்களாகப் பெரும்பான்மையினரால் மாற்றப்பட்டுள்ளனர்.
சிங்களவர்ளையே காணமுடியாத ஊராக இருந்த திருகோணமலையானது இவ்வாறானதொரு நிலையை எப்படி அடைந்தது எனில், புட்டும் தேங்காய்பூவையும் போன்று உருவாக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களால்தான்.
தமிழர் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்படும் சிங்கள குடியேற்றங்களின் நோக்கமும் இதுவேதான். இந்தக் குடியேற்றங்கள் தமிழர்களது மரபுவழி தாயகப் பிரதேசத்தை அபகரித்துக்கொள்ளும் அதேவேளை, அத்தகைய அபகரிப்புக்கு எதிரான ஜனநாயக வழி போராட்டங்களைக் கூடத் தடுத்துவிடுகின்றன.
சிங்களவர்கள் தாக்குவார்கள், வீடுகளை எரிப்பார்கள், கொல்வார்கள், கடத்துவார்கள், ரயர் இட்டு கொழுத்துவார்கள் என்கிற பயம் தமிழர்களை எல்லாவித அநீதிகளையும் பொறுத்துக்கொண்டு பேசாமடந்தைகளாக அடிமைவாழ்வு வாழும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.
திருகோணமலையில் இவ்வளவு அநீதிகள் நடந்தும் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் எனில் அந்த அமைதிக்குப் பெயர் நல்லிணக்கமல்ல.
சிங்களவர்களோடு இணைந்து வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல. பயம்தான் முழுக்காரணமும். அந்தப் பயம் தமிழர்களை அடங்கிப்போகச் செய்கிறது அல்லது புலம்பெயர்ந்து செல்ல வழியேற்படுத்துகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 15 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.