தரகு பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சி; மூடப்பட்டது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஆனந்த பாலித
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு அமைவாக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தற்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித (Ananda Palitha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கச்சாய் எண்ணெய் இறக்குமதியின் போது, பதிவு செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்து விலை மனுக்களை பெற்று, நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கு கச்சா எண்ணெய் வழங்கப்பட்ட விதத்தை கருத்திற்கொண்டு விலை மனுக்களை வழங்க வேண்டும்.
இலங்கையில் பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு பகிரங்க அழைப்பை விடுக்காது, அந்த விலை மனுவை அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) நைஜீரிய நிறுவனத்திற்கு வழங்கினார்.
பெட்ரோல், டீசல் வந்தது. ஆனால், இந்த நிறுவனத்தால் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியவில்லை. ஜூன் மாதத்திற்கு பின்னர் நைஜீரிய நிறுவனத்தினால் கச்சாய் எண்ணெயை வழங்க முடியாமல் போனது. இதனால் உடனடியாக பணத்தை செலுத்தி கொள்வனவு செய்யும் நிலைமை அமைச்சருக்கு ஏற்பட்டது.
எம்மிடம் இருந்த சிறந்த விநியோகஸ்தர்கள் இதுவரை விலை மனுக்களை கோரி விண்ணப்பிக்கவில்லை. தரகு பணத்தை பெற்றுக்கொள்ள முயற்சித்து அமைச்சர் உதய கம்மன்பில தவறு செய்து விட்டார்.
ஒக்டோபர் 5 ஆம் திகதி பிறகு கச்சாய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படவில்லை. உலகில் எண்ணெய் தட்டுப்பாடு இல்லாத நிலையில் இறக்குமதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக 50 சத வீதம் குறைவாக எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டது எனவும் ஆனந்த பாலித குறிப்பிட்டுள்ளார்.