எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய் கசிவா? உண்மைக்கு புறம்பான தகவல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றிய எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பலில் இருந்து பெருமளவிலான எண்ணெய் கசிவு ஏற்படுவதாக சர்வதேச செய்திச் சேவை ஒன்று வெளியிட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது என இராஜாங்க அமைச்சர் நாலக்கே கொடஹேவா தெரிவித்துள்ளார்.
கடலில் மூழ்கும் அந்தக் கப்பலுக்கு அருகில் ஸ்ரீலங்கா கடற்படையினர் அதேபோல இந்திய கடலோரபாதுகாப்பு படையினரும் இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வாறான கசிவு குறித்து எந்தவித தகவல்களையும் இதுவரை அறிவிக்கவில்லை.
எவ்வாறாயினும் இதனை மிகவும் சரியாக உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கப்பல் மூழ்கும் இடத்திற்கு விசேட சுற்றுச்சூழல் ஆய்வாளர்களை அனுப்புவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக கடல்சார் மாசுபாட்டை கண்காணிக்கும் கடல் மாசு கண்காணிப்பு அறிக்கை ( marine pollution surveillance report) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.