சட்ட உருவாக்கமா ஞானசாரர் பணி? சர்ச்சைகளுக்கு கோட்டாபய பதில்
தனக்கு ஆலோசனை வழங்க நியமிக்கும் செயலணிக்குழுவிற்கான தலைவர் பதவியில் தான் விரும்பிய நபரை நியமிக்க முடியும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்க கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara), ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான அரச தலைவர் செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்படவில்லை. அது சம்பந்தமாக தனக்கு ஆலோசனை வழங்கவே அவர், அந்தச் செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றில், இந்தச் செயலணிக்குழு தொடர்பாக வினவப்பட்ட போதே அரச தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தான் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் கட்சித் தலைவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்தால், நண்பர் ஒருவருடன் பழகக் கூட கட்சித் தலைவர்களிடம் தான் அனுமதி பெற நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீதியமைச்சராக அலி சப்ரியை நியமித்த போதும், இதேபோன்ற எதிர்ப்பே முன்வைக்கப்பட்டது. எனினும் அலி சப்ரி தற்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சேவையை நிறைவேற்றி வருகிறார் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.