கோட்டாபயவின் 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணி தொடர்பில் மனம் திறந்த ஞானசாரர்!
நாட்டில் சிறுபான்மை என்று ஒரு இனம் இல்லை என்றும் இலங்கையர்கள் என்ற இனம் மாத்திரமே இருப்பதாகவும், இன ரீதியாக யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்(Galagoda Aththe Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலணி தொடர்பில் தொலைகாணொளி ஊடாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக முடிந்தால் நியமித்து காட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம், சர்ச்சைக்குரிய தேரரான கலகொட அத்தே ஞானசார தேரர் சவால் விடுத்துள்ளார்.
மேலும் சுமந்திரன் போன்றவர்கள் இனவாத, மதவாத அரசியலை முன்னெடுக்கின்றனரே தவிர மக்களின் தேவை கருதி எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
'ஒரே நாடு ஒரே சட்டம்' என்பதற்கான செயலணிக்கு தமிழ் பிரதிநிதி ஒருவர் அவசியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி தமிழ் தேசிய அரசியல் தரப்பினர் தங்களுக்கான வாக்குகள் குறித்தே கவனம் செலுத்துகின்றனர். வடக்கு, கிழக்கில் மத ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும், தெற்குடனான மத பிரச்சினை குறித்து கருத்துரைக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதன் ஆரம்பத்திலேயே அதில் உள்ள குறைபாடுகளைக் கூறி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் முதலில் அதன் திட்டங்களை வகுப்பது முக்கியமானதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.