கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) வெளியிட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்களுக்காக பயன்படுத்தப்படும் பாஸ் புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடவுச்சீட்டு விநியோகம் வரையறுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம்
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் தற்பொழுது கையிருப்பில் 40000 கடவுச்சீட்டு பாஸ் புத்தகங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், புதிதாக கடவுச்சீட்டு புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ள காரணத்தினால் தற்பொழுது கடவுச்சீட்டுக்களை விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வழமையாக ஒருநாள் சேவை
வழமையாக ஒருநாள் சேவையில் 1200 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படும் நிலையில் தற்பொழுது அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்கப்பட உள்ளது.
இதனால் வழமையான நடைமுறைகளில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |