மேலுமொரு பலஸ்தீன ஊடகவியலாளரும் பலி! இஸ்ரேல் - ஹமாஸ் போரில் தொடரும் பதற்ற நிலை
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு இலக்காகி மற்றுமொரு பலஸ்தீன பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் படையினரால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலின் போது வீட்டிலிருந்த பலஸ்தீனியப் பத்திரிகையாளரான ஹனீன் அல் கஸ்தானும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
போர் துவங்கிய காலத்திலிருந்து இதுவரை சுமார் 95 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் உண்மைகள்
இஸ்ரேல், பலஸ்தீனத்திற்கிடையே நடக்கும் போரின் உண்மைகள் வெளிவராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் உண்மைகளை உலகுக்குத் தெரியவிடாமல் தடுப்பதற்காக பத்திரிகையாளர்களை திட்டமிட்டுக் கொல்வதாக செய்தி நிறுவனங்கள் இதன்போது குற்றம் சாட்டி வருகின்றன.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 அன்று ஹமாஸ் அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலளிக்கும் நோக்கில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் இதுவரை மொத்தமாக 18,800-க்கும் அதிகமான மக்களைக் கொன்றது மாத்திரமல்லாமல், பள்ளிகள், வழிபாட்டுத் தளங்கள், மருத்துவமனைகளைத் தரைமட்டமாக்கியுள்ளது.
சொந்த நாட்டு பிணைக் கைதிகள்
ஹமாஸ் அமைப்பு ஒளிந்திருப்பதாகக் காரணம் கூறி பொதுமக்கள் தங்கும் இடங்களிலும் முகாம்களிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு, காசாவில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளும் பலியாகின்றனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், சண்டையின் போது தவறுதலாக சொந்த நாட்டு பிணைக் கைதிகளையும் இஸ்ரேல் கொன்றமை குறிப்பிடத்தக்கது.