காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பஸ்தர்: நியாயமான விசாரணை கோரும் எம்பி
நாரம்மலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
நாரம்மல பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணையை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று காலை அலவ்வ பிரதேசத்தில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இறுதிக் கிரியைகள்
சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதான ரொஷான் குமாரதிலகவின் உறவினர்களுக்கு 10 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குவதற்கும் பதில் காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், இனிமேல் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என காவல்துறையினருக்கு மீண்டும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாரம்மல நகரில் நேற்று இரவு காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்ட ரொஷான் குமாரதிலகவின் சடலத்தின் இறுதிக் கிரியைகள் அலவ்விலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெறவுள்ளன.