ஈரானில் இப்போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 2 மில்லியன் ரியால்
பொருளாதாரத்தை நசுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இதுவரை இல்லாத மிகக் கடுமையான தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ஈரானிய ரியால் அமெரிக்க டொலருக்கு எதிராக வரலாறு காணாத புதிய சரிவைச் சந்தித்துள்ளது.
திறந்த உலக சந்தையில் அதன் மதிப்பு ஒரு டொலருக்கு 2 மில்லியன் ரியால்களைக் கடந்து அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல தசாப்தங்களாக அமெரிக்கா விதித்துள்ள தடைகளும், குறிப்பாக அதன் அணுசக்தித் திட்டம் தொடர்பான எதிர்ப்புக்களும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது.
ஈரானிய ரியால்
இதனால் ஈரானிய ரியால் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பணவீக்கப் பிரச்சினைகளும் மக்களுக்குத் துயரத்தைக் குவித்து வருகின்றன.

பெப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்ட, ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர், சுமார் 92 மில்லியன் மக்கள் வசிக்கும் அந்நாட்டின் பொருளாதாரச் சிக்கல்களை மேலும் மோசமாக்கியுள்ளது.
போருக்கு முன்பு, 2 மில்லியன் ரியால்களுக்கு சுமார் 4 கிலோ தக்காளி, அரை கிலோ கோழிக்கறி மற்றும் ஒரு லிட்டருக்கும் சற்றுக் குறைவான சமையல் எண்ணெய் ஆகியவற்றை வாங்க முடிந்ததாக மத்திய கிழக்கு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும், இன்று, அதே தொகைக்கு ஏறக்குறைய பாதி அளவிலான பொருட்களே கிடைப்பதாகவும், தக்காளியின் சராசரி விலை 71 சதவிகிதமும், கோழிக்கறி 74 சதவிகிதமும், சமையல் எண்ணெய் 177 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்சுலினின் விலை 642 சதவீதம் உயர்வு
நீரிழிவு நோயாளிகளின் உயிர்வாழ்வதற்கான அடிப்படைத் தேவையாக விளங்கும் இன்சுலினின் விலை 642 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போர் ஈரானின் பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கவில்லை என்றும் ஆனால் அது அவற்றை பெரிதாக்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
போரினால் ஏற்பட்ட சேதங்கள், தடைபட்ட உற்பத்தி மற்றும் முற்றுகை ஆகியவை புதிய அழுத்தங்களைச் சேர்த்துள்ள நிலையில், வேலையின்மை மற்றும் தேக்கமடைந்த வாங்கும் சக்தி ஆகியவை அவற்றைச் சமாளிக்கும் குடும்பங்களின் திறனைக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |