மட்டக்களப்பில் முகநூலில் மிரட்டி பணம் கோரிய இளைஞர்கள்: நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பில் (Batticaloa) முகநூல் ஊடாக கப்பம் கோரிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 24, மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் உள்ள ஒருவர் வழங்கி முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகைப்படம்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபரின் வாட்சப் செயலிக்கு புகைப்படம் ஒன்று சம்பவ தினமான (14) வந்துள்ளது.
இதையடுத்து, அவரின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து அதில் உள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களை தரவு இறக்கம் செய்துள்ளதாகவும் 70 ஆயிரம் ரூபா பணம் தருமாறு கப்பம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் பணம் தர மறுத்தால் அந்த புகைப்படங்களை முகநூல் ஒன்றில் தரவேற்றம் செய்வேன் என ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபர் பணம் தருவதாகவும் தற்போது கையில் பணம் இல்லை சீலாமுனையில் உள்ள வங்கியிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் எடுத்து தருவதாக தெரிவித்துள்ளார்.
கப்பம் கோரியவர்
இதனை தொடர்ந்து கப்பம் கோரியவர் தான் ஒரு இளைஞன் ஒருவரை அனுப்புவதாகவும் அவரிடம் ஒன்றும் பேசக்கூடாது பணத்தை வழங்கி வைக்குமாறு தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குறித்த நபர் தொடர்புடைய வங்கியிலுள்ள ஏ.ரி.எம். இயந்திரத்துக்கு சென்று காத்திருந்தபோது கப்பம் கோரியவர் அனுப்பப்பட்ட இளைஞனை அடையாளம் கண்டுள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞரிடம் நீ இன்னாரது சகோதரன் தானே என வினாவி உறுதிபடுத்திக் கொண்டுள்ளார்.
பின்பு, குறித்த இளைஞரிடம் இந்த ஏ.ரி.எம். இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை நாளைக்கு எடுத்து தருவதாக தெரிவித்து அந்த இளைஞனை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவு
இதன்பின்பு, குறித்த நபர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக காவல் நிலைய சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், 24 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்ததுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
