நிகழ்நிலை காப்பு சட்டமூலம்! டிரான் அலஸின் கருத்தை நிராகரித்த ஆசிய இணைய கூட்டமைப்பு
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பான நேற்றைய (23) நாடாளுமன்ற விவாதத்தின் போது, ஆசிய இணைய கூட்டமைப்பு குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் வெளியிட்ட கருத்தை, அந்த கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
சர்வதேச தரங்களுக்கு அமைய தயாரிக்கப்படாத சர்ச்சைக்குரிய குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது சட்ட விரோதமானது என அந்த கூட்டமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ஜெஃப் பெயின் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த ஆசிய இணைய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சர்வதேச நிறுவனங்களும் அனுமதி வழங்கியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சட்டத்தை தயாரிக்கும் செயல்முறை
எனினும், குறித்த சட்டத்தை தயாரிக்கும் செயல்முறையில் ஆசிய இணைய கூட்டமைப்பு ஆற்றிய சேவையை சரிவர வெளிக்காட்ட டிரான் அலஸ் தவறியுள்ளதாக அந்த கூட்டமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ஜெஃப் பெயின் குற்றம் சாட்டியுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இடம்பெற்ற சந்திப்புக்கேற்ப, கடந்த 8 ஆம் திகதி தமது கூட்டமைப்பு பரிந்துரைகளை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் ஆசிய இணைய கூட்டமைப்புக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச தரங்கள்
அத்துடன், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டுமெனவும் ஜெஃப் பெயின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூல வரைபை நிறைவேற்றினால், வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பாதிக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |