சிறிலங்காவில் ஊடகங்களை ஒடுக்க கொடூர சட்டம் : வலுக்கும் எதிர்ப்பு
அதிபரால் நியமிக்கப்படவுள்ள ஆணைக்குழு ஒன்றின் ஊடாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து இணைய வழி ஊடகங்களையும் ஒடுக்குவதற்கான புதிய சட்டங்களை கொண்டு வர சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது.
இதற்காக நிறைவேற்றப்படவுள்ள சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டம்
இந்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் அதிபரால் நியமிக்கப்படவுள்ள ஆணைக் குழுவின் உத்தரவுகளுக்கு அமைய, சமூக ஊடக கணக்குகள் உள்ளிட்ட அனைத்து இணைய வழி ஊடகங்களையும் தடை செய்யவும், இடையூறு செய்யவும் வெளியிடப்பட்ட செய்திகளுடன் அல்லது தகவலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டம் மூலம் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மூலமாக பெயரிடப்பட்டுள்ளது.
கொடூரமான சட்டம்
இதேவேளை, நிகழ் நிலைக் காப்புச் சட்டமூலம் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியாக இருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
முகப்புத்தகம், கூகிள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கையிலிருந்து விரட்டக்கூடும் என்று எச்சரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சட்டம் கொடூரமானது என்று முத்திரை குத்தியுள்ளார்.