ஈஸ்டர் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை : சஜித் கோரிக்கை
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை உள்ளக விசாரணை மூலம் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாதென்பதால் சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் இன்றிரவு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்பதிவு ஒளிபரப்ப உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இந்தவிடயம் அலசப்பட்ட போதே சஜித் பிரேமதாசவின் இந்தக்கருத்து கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், “அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் நான். அதிபர் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு கர்தினால் கோரியிருந்தார்.
வெளிநாட்டு விசாரணை
கர்தினால் மாத்திரமல்ல, கத்தோலிக்க மக்கள், இந்த நாட்டு மக்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் பொறுப்புகூற வேண்டியவர்களை கண்டறியுமாறு வெளிநாட்டு விசாரணையில் வெளிநாட்டு ஊடகத்தில் எமது நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூறுவது வெட்கக் கேடானது
இதற்கு எமக்கு வெளிநாட்டின் ஆலோசணை தேவையா? இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு உண்மையை கண்டறிவதற்கும் உண்மையை பேசுவதற்கும் திராணி இல்லையா? கர்தினால் அந்நேரத்தில் எனக்கு எதிராக வாக்களிக்க கூறியமை தொடர்பாக நான் வருத்தப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம். அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருக்கின்றது. கர்தினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற பிரதான சூத்திரதாரி குறித்து இந்த நாட்டில் விசாரணை செய்து தீர்க்க முடியாது.
சர்வதேச விசாரணை
இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். கர்தினாலுக்கும் கத்தோலிக்க மக்களுக்கும் கத்தோலிக்க மதத் தலைவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்த வேண்டாம்.
அவர்களுக்கு மனதில் வேதனை இருக்கின்றது.இவர்களுக்கு அதிகாரத்திற்கு வருவது தொடர்பான வேதனையே இருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முதலை கண்ணீர் வடித்து ஆட்சிக்கு வந்தனர்.
சபாநாயகரான நீங்கள் உட்பட ஆளும் தரப்பிலுள்ள அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து நீங்கள் கதைக்கவில்லையா? இவர்கள் கதைக்கவில்லையா? வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவில்லையா?
ஆகவே கர்தினால் , கத்தோலிக்க மக்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருமார்களை மேலும் அவமதிக்காமல், உடனடியாக முறையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.