கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 33 ஆவது நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்து காணாமால் ஆக்கப்பட்டவர்களின் 33 ஆவது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (05) வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு, தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.
பல்வேறு கோரிக்கைகள்
இதன்போது சர்வதேச நீதிப்பொறிமுறையின் கீழ் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
"வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரில் முதல் பெயரே இலங்கை நீதி தேவதை தான், எமது உறவுகள் எமக்கு வேண்டும், எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே, இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக போராடவேண்டும்?, எமக்கு நீதியான விசாரணை வேண்டும்" போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.