ரணிலால் மட்டுமே முடியும்! மார் தட்டுகின்றது ஐ.தே.க
இலங்கையில் சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாத்திரமே. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும்.
நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும்.
அவ்வாறு இலங்கையில் சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
2015 இல் நாம் ஆட்சியைக் கைப்பற்றிய போது எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. நாம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கும் போது பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 132 ரூபாவாகக் காணப்பட்டது.
எனினும் தற்போது 177 ரூபா வரை அதிகரித்துள்ளது. அன்று எமது எரிபொருள் விலை சூத்திரத்தை விமர்சித்தவர்களே இன்று அதனை பாராட்டுகின்றனர்.
எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று பெற்றோல் விலை 130 - 140 ரூபாவாகவே காணப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 3 மணி நேரம் முன்