புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் நிதி உதவியில் மன்னாரில் கருவள சிகிச்சை நிலையம் திறப்பு (படங்கள்)
புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின்( Tamil Diouspora Alliance )நிதி உதவியுடன், நிறுவப்பட்ட குழந்தைப் பேறு தாமதமடைபவர்களுக்கான கருவள சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (18) முற்பகல் 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவுடன் இணைந்து ஓர் அலகாக குறித்த நிலையம் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் க.செந்தூர் பதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக நிலையத்தை திறந்து வைத்த நிலையில் குறித்த நிலையம் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் எ.யோ.புஸ்பகாந்தன் மற்றும் பொறுப்பு தாதிய சகோதரி ரி.விமலேஸ்வரன் ஆகியோரிடம் வைபவ ரீதியாக பயனாளர் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
குறித்த கருவளர்ச்சி நிலைய அங்குரார்ப்பணம் மன்னார் மாவட்டத்தில் குழந்தை பேறு தாமதமாவதற்கு தகுந்த சிகிச்சை வசதி இல்லாத குறையை நீக்குவதற்கும், வறுமை மற்றும் போக்கு வரத்துப் பிரச்சினைகளால் பிற மாவட்டங்களுக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற முடியாத குழந்தைப் பேறு தாமதமடைந்த தம்பதிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையவுள்ளது. குறித்த நிலையத்தில் ஆண்களுக்கான விந்துப் பரிசோதனை, பெண்களுக்கான ஸ்கான் பரிசோதனை,லேப்ராஸ்கோபி (கமரா) பரிசோதனை, மற்றும் முட்டை வளர்ச்சி சிகிச்சை என்பன இலவச சேவையாக வழங்கப்பட உள்ளது.





