ரணிலின் வரவு செலவு திட்டம்: எதிர்க்கட்சியை தூண்டும் நாமல்
அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தீர்வுகள் இல்லாத வரவு செலவுத் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகின்றது என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி அதனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
எதிர்க்கட்சி, வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்காமல் வரவு செலவுத் திட்டத்தை சவால் செய்வதில் அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் இருந்த பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால், முன்னைய வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவான ஒருவரால் அதனை எதிர்க்க முடியாமல் போயுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் சமர்பிப்பது நியாயமானதா என்பதில் சிக்கல் இருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.