அம்பலமான ஊழல் மோசடிக்கு எதிர்ப்பறிக்கை விட்ட மைத்திரி தரப்பு
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஊழலுக்கு எதிரான குரல் அழைப்பாளர் வசந்த சமரசிங்க ஆகியோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அரச தலைவரின் செயலாளர் பதில் அளித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்புடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ராஜபக்ச குடும்பம், அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் தொடர்புடைய பாரிய ஊழல்களை அம்பலப்படுத்தினார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது குடும்பத்தினரும் பயனடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க மற்றும் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முன்னாள் அரச தலைவரின் செயலாளர் சமீர டி சில்வா, இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு ஆணைக்குழுக்களை நிறுவி இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று பிணைமுறி மோசடியின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்த முன்னாள் அரச தலைவர் கடுமையாக உழைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

