கொழும்பில் திடீரென ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்!
தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவு திட்டம் நாளை (07.11.2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விவாதிக்க இன்று (06.11.2025) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ஆரம்பிக்கபட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, வரவு செலவு திட்டங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் பல கல்வியாளர்களால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நோக்கம்
நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்தில் வெற்றிகரமாக பங்கேற்க தேவையான முக்கியமான உண்மைகள் மற்றும் தரவுகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விளக்கப்படுத்துவதே இந்தப் பட்டறையின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நாளை (07.11.2025) ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க மூலம் முன்வைக்கப்படும்.
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நவம்பர் 8 முதல் 14 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு நடைபெறும்.
மேலும் அதன் மீதான வாக்கெடுப்பு 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும். மூன்றாவது வாசிப்பு நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை 17 நாட்களுக்கு நடைபெறுவதுடன் மேலும் வாக்கெடுப்பு 5 ஆம் திகதி மாலை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |