நெருக்கடி நிலையில் அரசுடன் இணைந்து செயல்பட தயார்! எதிர் கட்சி பகிரங்க அறிவிப்பு
கொரோனா தடுப்பு வேலைத்திட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்யத் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் மீண்டும் அரசாங்கத்திற்கு சொல்கிறோம், ஏற்பட்டுள்ள பயங்கரமான கொரோனாத் தொற்றை அழிப்பதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
கொரோனா தடுப்புத் தொடர்பில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றை உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வினயமாக கோரிக்கை விடுக்கின்றோம்.
தம்புள்ள மத்திய பொருளாதார நிலையம் மூடப்பட்டுள்ளமையினால் பல விவசாயிகள் இன்று தமது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யமுடியாது தவித்துப் போயுள்ளனர். கொரோனா தொற்றுக் காலப்பகுதியில் பொருளாதாரத்தை கொண்டு செல்வதற்கான திட்டமிடல் எங்கு என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம்.
ஆகவே தான் நாங்கள் மீண்டும் கூறுகின்றோம் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் ஒரு வேலைத்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும். நாடு இன்னும் கீழ் நோக்கி வீழ்ந்துவிடாது, மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் நோக்கில் அனைவரும் பணியாற்றுவோம் என்றார்.