சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: திரும்பப் பெறும் எதிர்க்கட்சி
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை திரும்பப் பெறுவதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய சில நிபந்தனைகள் மற்றும் விடயங்கள் இப் பிரேரணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டி இருந்தது.
இந்தநிலையில் அவற்றை நிவர்த்தி செய்து திருத்தப்பட்ட புதிய முன்மொழிவைச் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி நிரல்
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து இப் பிரேரணையை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணைகளுக்குத் இடையூறாக அமையக்கூடும் என அரசாங்கத் தரப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
நாடாளுமன்ற நடைமுறை விவகாரங்கள் குறித்த குழு கூட்டத்தில், இப் பிரேரணை நீதிமன்ற வழக்குகளைப் பாதிக்குமா என்பதை ஆராய்வதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் அதுவரை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படவில்லை.
நிலுவையிலுள்ள வழக்கு
இருப்பினும், நீதிமன்ற வழக்குகளைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு சரத்துக்களும் பிரேரணையில் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதுடன் உள்ளடக்கம் காரணமாக இம்முன்மொழிவைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிக்கும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளது.
நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பாதகமான அம்சங்கள் அகற்றப்படாமல் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏன் சமர்ப்பிக்கப்பட்டது என ஆளும் கட்சி கேள்வி எழுப்பிய நிலையில், இப் பிரேரணை நீதிமன்ற வழக்குகளுக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாது எனப் நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதேவேளை, நிலுவையிலுள்ள வழக்குகளைப் பாதிக்கும் அம்சங்கள் பிரேரணையில் இடம்பெற்றுள்ளதை நாடாளுமன்றச் செயலாளர் ஜனகாந்த டி சில்வா (Janakantha de Silva) ஒப்புக்கொண்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட இப் பிரேரணையில் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இக் கோரிக்கை தொடர்பான விவாதத்தை அரசாங்கம் தட்டிக்கழிக்க இடமளிக்கக் கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |