நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரமிற்கு வழங்கப்பட்டுள்ள கட்டளை!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டப் பேரணியில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமிற்கு கல்முனை நீதவான் நீதிதமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்ற தடையுத்தரவை மீறியமைக்காக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அழைப்பாணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழ் மக்களின் உரிமைக்காக கடந்த 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் பொலிகண்டி வரை போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியை தடுக்கும் நோக்கில் வடக்கு கிழக்கிலுள்ள பொலிஸார் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளை பெற்றிருந்தனர்.
எனினும் தடைகளைத் தாண்டி இந்த போராட்டப் பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பக்களின் பிரதிநிதிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமிடம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் அழைப்பாணையை இன்று பொலிஸார் வழங்கியுள்ளனர்.
எனினும் தான் பேரணியில் கலந்துக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு எதுவும் காவல்துறையினரால் தனக்கு வழங்கப்படவில்லை எனவும், ஆதலால் தான் பேரணியில் கலந்துக்கொண்டதாகவும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் நீதிமன்ற அழைப்பாணையை நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமிடம் வழங்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதேவேளை நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அழைப்பாணை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.