வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிடியாணை : மன்னார் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மன்னார் (mannar)நீதிமன்றத்தில் இன்றைய தினம் (30) நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதவான், காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பின்னர் இரண்டு சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கு விசாரணைகள்
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது அவர் மன்றில் முன்னிலையாகவில்லை. மேலும் இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பிணையாளி இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலையாக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டி
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை வைத்தியர் அர்ச்சுனா எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |