அரச நிறுவனங்களில் பாரிய ஊழல் : பரிந்துரைகள் குப்பைக் கூடைக்குள்
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல், மோசடி, முறைகேடுகளை தடுப்பதற்காக வழங்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் பரிந்துரைகள் தொடர்பில் இதுவரை தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அரசாங்க கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன(WPC Wickramaratne) தெரிவித்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமை பாரிய பிரச்சினை எனவும், திணைக்களம் வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணக்காய்வு விசாரணை நடத்த ஆண்டுதோறும் செலவிடும் தொகை
கணக்காய்வு விசாரணை நடத்துவதற்காக அரசு ஆண்டுதோறும் செலவிடும் தொகை கோடிக்கணக்கில் உள்ளதாக கூறப்படுகிறது.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒவ்வொரு அரச நிறுவனங்களும் கட்டுப்பட்டிருப்பதாகவும் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.
நிர்வாகத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகளையோ அல்லது கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் வழங்கிய பரிந்துரைகளையோ சில நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை.
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத அரச நிறுவனங்கள்
எனவே, அரசு நிறுவனங்கள் தொடர்பாக, கணக்காளர் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது, அரசு கணக்குக் குழு மற்றும் நிதிக் குழுவின் பொறுப்பாகும்,' என, அரசு தலைமை கணக்காளர் தெரிவித்தார்.
இதேவேளை, கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் சில நிறுவனங்களின் தலைவர்களினால் புறந்தள்ளப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |