நாட்டில் இராணுவமயமாக்கலா?? அரசாங்கத்திற்கு பங்காளி கட்சி விடுத்துள்ள கோரிக்கை
அவசரகால சட்டத்துக்கு எதிர்ப்பு என்றபோதிலும் அத்தியாவசிய தேவையின் நிமித்தமே அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். எனவே, அவசரகால சட்டம் நீண்ட நாள்களுக்கு நீடிக்கப்படக்கூடாது என சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இராணுவ மயமாக்கல் நடவடிக்கையை எமது கட்சி அனுமதிக்காது. அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவோம். எனினும், இராணுவ மயமாக்கலை இலக்காகக்கொண்டு அவசரகால சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
உணவு பொருட்களை பதுக்கி வைத்தல் மற்றும் கறுப்பு வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது.
குறித்த சட்டத்துக்கு கொள்கை ரீதியில் நாம் எதிர்ப்பு என்றபோதிலும், அத்தியாவசிய தேவையின் நிமித்தம் என்பதாலேயே நாம் ஆதரவளித்தோம்
குறித்த அவசரகால சட்டம் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என நம்புகின்றோம் எனவும் அதற்காக தேவையும் எழாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.