நிலவும் சீரற்ற காலநிலை : வடக்கில் பேரழிவை சந்தித்த நெற்செய்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 338,446 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்தார். இந்த அழிவினால் 137,880 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலேயே அதிக இழப்புகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம், அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெற்செய்கைகள் இன்னும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் பயிர்ச் சேதங்கள் தொடர்பில் இன்னும் உறுதியான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது” என்றார்.
சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் தமது கமநல அபிவிருத்தி நிலையங்களுக்குச் சென்று தமது கடமைகளை ஆரம்பிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
நாசமான நெற்பயிர்கள்
46,674 விவசாயிகளின் 101,035 ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாக வெள்ள நீர் வடிந்துள்ள பிரதேசத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. இன்னும் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களின் அளவு 237,481 ஏக்கர் ஆகும். பயிர் சேதம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 91,206 ஆகும்.
வவுனியாவில் 23,930 ஏக்கரும், மன்னாரில் 23,247 ஏக்கரும், திருகோணமலையில் 20,865 ஏக்கரும் நெற்செய்கை இதுவரை அழிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மலையகத்திலும் மரக்கறிச் செய்கை அழிக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியாவில் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ் உள்ளிட்ட பல மரக்கறிச் செய்கைகள் முற்றாக அழிவடைந்துள்ளன” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |