காஷ்மீர் தாக்குதலை நிராகரித்த பாகிஸ்தான் : உச்சகட்ட ஆத்திரத்தில் இந்தியா
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து பாகிஸ்தான் மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஒப்பந்தம் ரத்து
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அத்தோடு, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது.
தொடர்ந்து பாகிஸ்தானும் தனது வான் எல்லையை மூடுவது, சிம்பா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து பாகிஸ்தான் மந்திரிசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானத்தை அந்நாட்டின் துணை முதல்-மந்திரி இஷாக் தார் முன்மொழிந்தார் இதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
ஆயுதப் படைகள்
முன்னதாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் தற்போதைய நிலைப்பாடு குறித்து 26 நாடுகளைச் சேர்ந்த தூதர்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளதாக இஷாக் தார் தெரிவித்தார்.
அத்தோடு, இந்தியாவின் எந்தவொரு நடவடிக்கையையும் எதிர்கொள்ள பாகிஸ்தானின் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், பஹல்காம் தாக்குதலுடன் பாகிஸ்தானை இணைக்கும் அனைத்து ஆதாரமற்ற முயற்சிகளையும் தங்கள் அரசு நிராகரிப்பதாகவும், அப்பாவி பொதுமக்களைக் கொல்வது பாகிஸ்தானின் மாண்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயங்கரவாத பிரச்சினையை அரசியல் நோக்கத்திற்காகவும், பாகிஸ்தானை அவமதிப்பதற்காகவும் பயன்படுத்துவதை கண்டிப்பதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்ததை கண்டித்தும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
