பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் எதிர்வரும் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிடவிருந்த வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் (31) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய ‘ரெஹான் ஜெப் கான்‘ என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இம்ரான் கானின் கட்சி ஆதரவு
இந்நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ‘ரெஹான் ஜெப் கானுக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் வழக்கு ஒன்றில், இம்ரான் கான் மற்றும் அவருடைய மனைவி பூஷ்ரா ஆகியோருக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன் எல்லைப் பகுதியின் இருபுறத்திலும் இஸ்லாமிய அமைப்பினர் உள்ளனர். எனினும், தாக்குதலை நடத்தியது யார் என்று தெரியவில்லை.
பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டுவெடிப்பு
இதேவேளை பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா நகரில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் கடந்த 30 ஆம் திகதி பேரணி ஒன்றை நடத்தினர்.
அக்கட்சியின் கொடியை ஏந்தியபடி, மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றபோது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென குண்டுவெடிப்பு இடம்பெற்றது.
இந்த சம்பவத்தில், அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |