பறாளாய் முருகன் கோவிலிலும் பங்கு கேட்கும் பௌத்த தொல்லியல்துறை
யாழ் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யாழ் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்க அனுமதிக்க முடியாது! |
குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால் , எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து , புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது.
அதேவேளை, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பிக்குகள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென்ற நிலையில் , ஆலய அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையை வைத்து பிரித் ஓத முனைப்பு காட்டி இருந்தனர்.
அதற்கு ஆலய பக்தர்கள் மற்றும் ஊரவர்கள் எதிர்ப்பு காட்டியதால் , பிக்குகள் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.
இந்நிலையிலையே தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கலாசார அழிப்பு
பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின் அவருடன் தொடர்புபட்ட மரமாக சித்திரித்து வர்த்தமானி வெளியிட்டமை கலாசார அழிப்பு என வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் வெள்ளரசு மரம் உள்ள இடமெல்லாம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் இலட்சனை
சிநிலங்காவின் தொல்லியல் திணைக்களத்தைப் பொறுத்தவரை, அது பௌத்த மதத்திற்கு மாத்திரமான ஒன்றாகவே தனது நடவடிக்கைகளை இப்போது வரை மேற்கொண்டுவருகிறது.
இதனை தொல்லியல் திணைக்களத்தின் இலட்சனையில் இருக்கும் தாது கோபுரம் வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


