பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் அறிமுகப்படுத்தும் திகதி அறிவிப்பு
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பதக்கங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இப்போட்டிகளுக்கான மற்றொரு தொகுதி டிக்கெட் விற்பனையும் அன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2024 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெறவுள்ளது.
வழங்கப்படவுள்ள பதக்கங்கள்
இம்முறை 32 வகையான விளையாட்டுகளில் 329 போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன் இப்போட்டிகளில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் எதிர்வரும் 8ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த வருடம் ஆரம்பமாகியது. ஏற்கனவே 7 மில்லியன்களுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மற்றொரு தொகுதி டிக்கெட் விற்பனை எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கொள்வனவு
https://tickets.paris2024.org எனும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் டிக்கெட் விற்பனைக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக டிக்கெட்டுகளை கொள்வனவு செய்யலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளும் மேற்படி இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான 45 சதவீதமான டிக்கெட்டுகளின் விலை தலா 100 யூரோவுக்கு குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள்
மேற்படி உத்தியோகபூர்வ இணையத்தளம் தவிர்ந்த வேறு மூலங்கள் ஊடாக டிக்கெட் கொள்வனவு செய்யமுற்படும்போது, டிக்கெட் விநியோகிக்கப்படாமை, அத்தகைய டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களால் விளையாட்டு அரங்குகளுக்கு அனுமதிக்கப்படாமை போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் என ஏற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், உத்தியோகபூர்வ தளங்களுக்கு வெளியில் டிக்கெட்டுகளை வாங்குவதும் மீள் விற்பனை செய்வதும் பிரெஞ்சு சட்டப்படி குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டுகளை வாங்கியோர் அவற்றை மீள்விற்பனை செய்வதற்கான உத்தியோகபூர்வ தளமொன்று இளவேனிற் காலத்தில் (மார்ச் இறுதியில்) திறக்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |