இலங்கை விவகாரத்தில் உறுதிபூண்ட இந்தியா..!
மக்களின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாகப்பட்டினம் - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர், ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.
படகுச் சேவை
நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டமை எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல். இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.
இலங்கை அதிபரின் அண்மைய விஜயத்தின்போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலை நோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள்.
இணைப்பு என்பது 2 நகரங்களை நெருக்கமாகக் கொண்டு வருவது மட்டுமல்ல. இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது.
இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.
நேரடி விமான சேவை
சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019 ஆம் ஆண்டு தொடங்கியது. இப்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை மற்றொரு முக்கியமான படியாகும். என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பங்களிப்பு வழங்கிவருவதாகவும் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.