மொட்டுக்கு கடும் நெருக்கடி : ரணில் பக்கம் சாய்ந்தார் பவித்ரா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (pavithradevi wanniarachi) தீர்மானித்துள்ளார். தனது ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை தான் எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு.
2024 ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக இதனை வெளியிடுகின்றேன். என்னுடன் அரசியல் ரீதியாக செயற்படும் கட்சி உறுப்பினர்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏனைய கட்சிகளுடன் நீண்ட அரசியல் கலந்துரையாடலின் பின்னரே இந்த அரசியல் முடிவை எடுத்துள்ளேன்.
2022 ஆம் ஆண்டில், நமது தாய்நாடு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகவும் ஸ்திரமற்ற நிலைக்கு மாறியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அப்போது நிலவிய ஸ்திரமின்மையிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக, சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான பல அரசியல் குழுக்கள் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
ரணில் விக்ரமசிங்க மீது வைத்துள்ள நம்பிக்கை
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய அரசியல் சக்திகள் ரணில் விக்ரமசிங்க மீது வைத்துள்ள நம்பிக்கையின் பிரகாரம், எமது தாய்நாடு தற்போது குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது.
இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்குமாறு என்னிடம் தெரிவிக்கின்றனர்.
என்னுடன் இணைந்து செயற்படும் இரத்தினபுரி மாவட்ட மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு செவிசாய்ப்பதே எனது அரசியல் வாழ்க்கையில் நான் எப்போதும் கடைப்பிடித்து வரும் கொள்கையாகும்.
யதார்த்தமான அரசாங்கத் தலைவர் தேவை
மேலும், நாம் அனைவரும் பெரும் தியாகங்களைச் செய்து ஸ்திரப்படுத்திய எமது தாய்நாட்டை மேலும் கட்டியெழுப்ப நேரடியான யதார்த்தமான முடிவுகளை எடுக்கும் அரசாங்கத் தலைவர் இந்த தருணத்தில் தேவை என்பது எனது நம்பிக்கை.
எனவே, நான் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் தொடர்ந்தும் இருந்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய ரணில் விக்ரமசிங்கவுக்கு எனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளேன். அதற்கு உங்கள் ஆசியையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |