பாடசாலை அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து பிரதமரின் அறிவிப்பு!
இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விபரங்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தேசிய பாடசாலைகளில் 133, மாகாண பாடசாலைகளில் 27 என மொத்தம் 160 பணியிடங்கள் காணப்படுகின்றன.
இலங்கை ஆசிரியர் சேவை
தேசிய பாடசாலைகளில் 139, மாகாண பாடசாலைகளில் 7,125 என மொத்தம் 7,264 அதிபர் சேவை பணியிடங்கள் உள்ளதுடன் மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணிபுரிகின்றனர்.

பாடசாலை வகைகளின் அடிப்படையில் 1AB பாடசாலைகளின் அதிபர்களுக்கு 8,000 ரூபாயும், 1C பாடசாலைகளின் அதிபர்களுக்கு 5,500 ரூபாயும், வகை 2 பாடசாலைகளின் அதிபர்களுக்கு 4,500 ரூபாயும், வகை 3 பாடசாலைகளுக்கு 4,000 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்படுகின்றன.
அத்துடன், கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்குக் கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.
எரிபொருள் கொடுப்பனவு
தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள், போக்குவரத்து உள்ளிட்ட கொடுப்பனவுகள் அதிகபட்சமாக 25,000 ரூபாய் வரை வழங்கப்படுகின்றன.

3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெறுவதற்கு தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும்.
எனவே 3ஆம் மற்றும் 2ஆம் தரங்களிலிருந்து அடுத்த தரத்திற்குப் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம், சம்பள ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்தி பயிற்சிகள் என்பன அவசியமாகும்.
மேலும், 1ஆம் தரப் பதவி உயர்வுக்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |