சிறிலங்காவுக்கு ஆபத்தில் உதவுபவர் - பிரித்தானிய அரசியல்வாதிக்கு பீரிஸ் பாராட்டு மழை
சர்வதேச சமுகத்தினால் இலங்கை மீது குற்றம் சுமத்தப்பட்ட போதெல்லாம் மைக்கல் நெஸ்பி பிரபு(Lord Nesby) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டார் எனவும், அதனை புரிந்து கொள்ளும் அரசியல்வாதியொருவர் இலங்கைக்கு எப்பொழுதும் தேவை எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்(G.L. Peiris) தெரிவித்தார்.
தற்போது ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் மைக்கல் நெஸ்பி பிரபு உட்பட ஏனைய முக்கிய விருந்தினர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,
இலங்கையில் உள்ள பிரச்சனைகள் மிகவும் சிக்கலானவை.உண்மையில் பிரித்தானியாவிலும் சர்வதேச அளவிலும் இதை நன்கு அறிந்தவர் மைக்கல் நெஸ்பி பிரபு தான்.இலங்கை பற்றி நெஸ்பி பிரபுவுக்கு எப்போதும் நல்ல புரிதல் இருந்தது அது இலங்கைக்கு சாதகமாக இருந்தது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டாலும் இது மிகவும் சிக்கலான விடயமாகும்.இதனை புரிந்து கொண்ட பிரித்தானிய அரசியல்வாதிகளில் முதன்மையானவர் நெஸ்பி பிரபு.
இங்கு இன்னுமொன்றையும் குறிப்பிட வேண்டும்.அதாவது இங்கிலாந்தில் கல்வி கற்ற ஒருவர் இலங்கையிலோ அல்லது வேறு நாட்டிலோ எந்தவொரு தொழிலிலும் ஈடுபடும் திறனும் அனுபவமும் கொண்டவராகவே இருப்பார் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை உயர் ஸ்தானிகர் திருமதி சரோஜா சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட கௌரவ அதிதிகளுக்கு மைக்கல் நெஸ்பி பிரபு மதிய விருந்து வழங்கினார்.