நாட்டின் வரவு செலவு திட்டம் குறித்து வெளியான தகவல்
எந்த கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் வரவு செலவு திட்ட பற்றாக்குறை இருக்குமென போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்றவற்றை வழங்கிய பின்னர் அரசாங்கத்தினால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
பொருளாதாரக் கட்டமைப்பு
சுதந்திரத்திற்குப் பின்னர் நாடு இந்தளவுக்கு வங்குரோத்தடைந்த முதற் தடவை இதுவாகும் அத்தோடு குறிப்பாக இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தையுடைய நாட்டினால் சர்வதேச ஒத்துழைப்பில்லாமல் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
தனியாக எழுந்து நிற்பதற்கான பொருளாதாரக் கட்டமைப்புக்கள் நாட்டில் இல்லை மேலும் பல தசாப்தங்களாக அரச வரவு செலவுத் திட்டத்தின் நடப்புக் கணக்கில் நாடு தாங்க முடியாத பற்றாக்குறை உள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம்
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி அஸ்வெசும போன்ற நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் அரச கடன் வட்டி போன்றவற்றைச் செலுத்திவிட்டு அரசாங்கத்தினால் வேறு எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
இதுதான் அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ளாத பொருளாதார உண்மை எனவே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அல்லது பொதுஜன பெரமுன அல்லது வேறு எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை இருக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |