வெளிநாடுகளுக்கு ஓடும் இலங்கையர்கள்! “நாட்டுக்கு நல்லது” என்கின்றார் அமைச்சர்
தங்களது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.அது தவறான விடயமல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். .
மேலும் அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை என்பதோடு, இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குப்பின் இலங்கையிலுள்ள ஏராளமான இளைஞர் யுவதிகள் வெளிநாட்டுக்கு செல்வதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதற்காக தினமும் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.