ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என அவர் அரச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படக்கூடும் என்று நாமல் ராஜபக்ஷ தொடர்ச்சியாகக் குறிப்பிட்டது, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தான் கைது செய்யப்படுவோம் என்பது நன்றாகவே தெரியும் என்பதால் தான், இருப்பினும் எந்தக் காரணத்திற்காகத் தனது கைது இடம்பெறப்போகிறது என்பதை நாமல் பகிரங்கமாக வெளிப்படுத்த மறுக்கிறார்.
ராஜபக்சக்களின் குடும்ப அரசியல்
ராஜபக்சக்களும் தங்களது தவறுகளைத் தாங்களே உணர்ந்திருப்பதால் தான் கைது பற்றிப் பேசுகிறார்கள். அநுராதபுரத்தில் பேரணிகளையோ அல்லது வேறு எங்கு என்ன கூட்டங்களை நடத்தினாலும், நாட்டு மக்கள் மிகவும் தெளிவான தீர்மானத்தில் இருக்கிறார்கள். ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்.

ராஜபக்சக்கள் தங்களது குற்றங்களையும் ஊழல்களையும் மறைப்பதற்காகவே தற்போது மீண்டும் மக்கள் கூட்டங்களை நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
குறிப்பாக, 'ஏயார் பஸ்' விமானக் கொள்வனவு ஒப்பந்த ஊழல் என்பது இலங்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்ல, மாறாக லண்டன் மேல் நீதிமன்றத்தில் ஏயார் பஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழக்காகும்.
சட்ட நடவடிக்கை
உலகளவில் பல்வேறு நபர்களுக்கு ஏயார்பஸ் நிறுவனம் இலஞ்சம் கொடுத்துள்ளமை நீதிமன்றத்தில் உறுதியான நிலையில், அதன் நேரடித் தொடர்புகளே ராஜபக்ச குடும்பத்தினரை நோக்கி வந்துள்ளன.

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் அரசியல்வாதிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவாளர்களை பயன்படுத்தி தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வது வழமையாகும். அதேபோன்ற ஒரு சமூகக் கருத்தை உருவாக்கித் தங்களது குற்றங்களைக் குறைத்துக்காட்டவே ராஜபக்சக்களும் தற்போது முயல்கின்றனர்.
இருப்பினும், இவ்வாறான அரசியல் நாடகங்களுக்கும் மேடைக் பேச்சுக்களுக்கும் கட்டுப்பட்டு இலங்கையின் சுயாதீன நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளையோ சட்ட நடவடிக்கைகளையோ ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.
எனவே, அவர்கள் செப்டம்பர் 12-ஆம் திகதியோ அல்லது 13, 14, 15 ஆகிய திகதிகளிலோ பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தினாலும், அரசாங்கத்திற்கும் சட்ட நடவடிக்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |